நிகழ்வுகள்
முக்கியமான நிகழ்வுகள்
1.மாசி மகத் திருவிழா
கோவிலின் முக்கிய திருவிழாவாக இத்திருவிழா கருதப்படுகிறது. கோவில் முழுவதும் பக்தர்கள் நிறைந்து காணப்படும். இத்திருவிழா அன்று பக்தர்கள் தங்கள் வேண்டுதலின் பேரில் காவடி, பால்குடம், முடி காணிக்கை போன்ற பல நேற்றிக்கடன்களை செலுத்துவர். மாலை சந்திரசேகரர் அம்பாள் சொர்ணங்கியில் ரிஷப வாகனத்தில்கோவிலை வளம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
2.தேய்பிறை அஷ்டமி
மாதம் தோறும் வரும் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவருக்கு சிறப்பு யாகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடைபெறும்.
3.தேய்பிறை பிரதோஷம்
இத்திருக்கோவிலில் தேய்பிறை பிரதோஷம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆகையால் இத்திருநாளில் சிறப்பு ஜெபம் நடத்தி கடத்தில் உள்ள புனித நீரை உருஏற்றி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது.
4.மகா சிவராத்திரி
இத்திருநாள் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வாய்ந்த நாளாகவே கருதப்படுகிறது. இத்திருக்கோவிலில் நான்கு கால சிவராத்திரி பூஜை மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நான்காம் காலத்தில் ரிஷப வாகனத்தில் சந்திரசேகரர் அம்பாள் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.w
5.சோமவார சங்காபிஷேக வழிபாடு
இத்திருநாளில் சுவாமிக்கு சிறப்பு யாகம் நடத்தி 108 சங்கினால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பெற்று பின் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்படுகிறது.
6.ஆடிப்பூர விழா
அம்பாளுக்கு உரிய இந்த விழா நம் திருக்கோவிலிலும் சிறப்பாகவே நடைபெற்று வருகிறது இத்திருநாளில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்று அம்பாளுக்கு வளையல்கள் அணிவிக்க பெற்று அந்த வளையல்கள் சுமங்கலி பெண்களுக்கு வினியோகிக்கப்படுகிறது.
7.நவராத்திரி விழா
இதுவும் கோவிலில் முக்கிய விழாவாகவே பார்க்கப்படுகிறது. நவராத்திரியின் ஒன்பது நாட்களும் கோவிலின் பிரதான நாகியான உற்சவர் மங்களநாயகி கொழு மண்டபத்தில் எழுந்தருளச் செய்து மாலை வேலைகளில் சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதங்கள் விநியோகிக்கப்படுகிறது.
8.அம்பு போடுதல்
கோவிலில் ஈஸ்வரனான மலைக்கொழுந்தீஸ்வரன் சந்திரசேகரர் ரூபத்தில் குதிரை வாகனத்தில் புறப்பட்டு கிராமத்தின் முக்கிய இடமான வாரச்சந்தையில் சுவாமி அம்பு எய்துவார். அதனைத் தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியே சென்று ஒவ்வொரு வீட்டின் மாலை மரியாதை ஏற்றுக் கொண்டு பின்பு கோவிலுக்கு திரும்புவார். இத்திருநாளில் மட்டுமே வருடத்திற்கு ஒருமுறை சுவாமி நெடுந்தூரம் பயணிப்பார்.
9.கார்த்திகை தீப பஞ்சமூர்த்தி புறப்பாடு விழா
இத்திருநாளில் காலை வேளையில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று அன்று மாலை பஞ்ச மூர்த்திகளான விநாயகர் மூஷிக வாகனத்திலும், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை மயில்வாகனத்திலும், சோமாஸ்கந்தர் பிரியாவிடை அம்பாள் பெரிய ரிஷப வாகனத்திலும், தனி அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் சிறிய ரிஷப வாகனத்திலும், கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். அன்று ஒரு நாள் மட்டுமே பஞ்சமூர்த்தி புறப்பாடு வருடத்திற்கு ஒருமுறை நடைபெறுகிறது. பஞ்சமூர்த்திகளும் இரவு மின்னொளியில் வருவது சுவாமியின் கைலாய காட்சியாகவே என்ன தோன்றும்.